Show all

சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்தார் நடிகை விஜயசாந்தி! திமுக- காங்கிரசுக்கான தூது

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்தித்து ஒரு  நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த விஜயசாந்தி ஐபிஎஸ், மன்னன் உள்ளிட்ட படங்கள் பிரபலமானவை. திரைப்படத்தில் நடிப்பதை விட்டு விட்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பல்வேறு படி நிலைகளுக்குப் பிறகு தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நேற்று சந்தித்து பேசினார். அவருடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் பேசி கொண்டிருந்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கூட்டணிக்கு அவரது ஆதரவைக் கேட்டதாக தெரிகிறது. சசிகலாவும் கட்சியினருடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு பதில் சொல்வதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. 

சசிகலாவுடன் விஜயசாந்தி நெருக்கம் காட்டி வருகிறார். கணவர் மா.நடராசன் மறைந்த போதும் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இராகிநகர் இடைத்தேர்தலில் தினகரனை ஆதரித்து கருத்துப் பரப்புதல் செய்திருந்தார்.

சசிகலா அணிதான் உண்மையான அதிமுக என்பதை காங்கிரஸ் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ள திமுகவை முதலிடத்திலும், சசிகலா அணியை இரண்டாவது இடத்திலும் வைத்துப் பார்க்கிறது காங்கிரஸ். அதனால் சசிகலா அணியை திமுகவுடன் இணைத்துக் கொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதுகிறது.

தினகரன் (சசிகலா அணி) தனித்து இயங்கும் போது, எண்பது விழுக்காடு அதிமுகவினர் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள். எடப்பாடி, பன்னீர் அணி சசிகலா அணியின் தலைமையை ஏற்றுக் கொண்டால், நூறு விழுக்காடு அதிமுகவினரின் ஆதரவு இருக்கும். 

தினகரன் காங்கிரசோடு இணைந்தால், எண்பது விழுக்காடு அதிமுகவினரின் ஆதரவில் குறைபடாது. ஆனால் திமுகவோடு இணைந்த காங்கிரசில் இணைந்தால், இருபது விழுக்காடு அதிமுகவினரின் ஆதரவுதாம் அவருக்கு இருக்கும். எடப்பாடி- பன்னீர் அணி எண்பது அதிமுகவினரின் ஆதரவைத் தட்டிச் சென்று விடும். 

இது எடப்பாடியை நம்பி ஏமாந்து போன சசிகலாவிற்கு புரிகிறதோ இல்லையே, தினகரனுக்கு மிக மிக தெளிவாகப் புரியும். திமுகவை கழட்டி விட்டால் காங்கிரசை தினகரன் ஆதரிப்பார். சசிகலாவை அங்கிகரித்தால், எடப்பாடி- பன்னீர் அணியை ஏற்பார். திமுகவோடு இணைந்த காங்கிரசை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார். விஜயசாந்தி சசிகலாவை சந்தித்ததில் ஒரு பயனும் இருக்காது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.