Show all

சட்டமா? அரசியலா! காந்தியைக் கொன்றவர்களுக்கு 16 ஆண்டுகளில் விடுதலை- எழுவர் விடுதலைமறுப்பு குறித்து மாணவர்கள் கேள்வி

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் இன்று சென்னையில் இதழியலாளர்களை சந்தித்தனர். 

சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுனில், ராஜீவ் காந்தி கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த அஜித் மற்றும்  புதுவை தாகூர் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஹரிகரன் போன்றவர்கள் பேசினர். அவர்கள் பேசும்போது,  'நாங்கள் மாணவர்கள். இந்திய நாட்டின் குடிமக்கள். இந்திய நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக, நியாயத்தை நிலை நிறுத்துவதாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அந்த வகையில், கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக்கிடக்கும் ஏழு பேர் குறித்துப் பேச அவசியமான தேவை இருக்கிறது. 

ஏறக்குறைய 28 ஆண்டுகளை சிறைக்குள்ளேயே கழித்துவிட்டனர். இந்நிலையில், கடந்த ஆண்டு உச்ச அறங்கூற்றுமன்ற மூவர் அமர்வு, எழுவர் விடுதலையில் மாநில அரசே முடிவெடுத்துக்கொள்ள உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் கூடிய தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, ஏழு பேரின் விடுதலைக்குப் பரிந்துரைசெய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும் இவர்கள் ஏழு பேரின் விடுதலைக் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது வியப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது. 

அரசியல் சாசனம் உறுப்பு 161-ன்படி, ஆளுநர் மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்றாலும், ஆளுநர் மாளிகையின் செய்தி குறிப்பின்படி, சட்ட நிபுணர்கள் கருத்து பெறப்போகிறார் என்பதால், சில நாள்கள் எடுத்துக்கொள்வார் எனக் கருதினோம். ஏற்கெனவே மாநில அமைச்சரவை உரிய சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுத்துள்ள நிலையில், அதுகுறித்த ஆளுநரின் தனி விசாரணை தேவையற்றது. மேலும், மரூ ராம் உள்ளிட்ட பல்வேறு உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்புகள் ஆளுநர் இதுபோன்று தனி விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. இருப்பினும், ஆளுநர் அவ்வாறு ஆராய்ந்து அதனடிப்படையில் மனநிறைவு கொள்ளட்டும் எனக் காத்திருந்தோம். ஆனால், இந்நாள் வரை அதுபோன்ற சட்ட நிபுணர்கள் கருத்து பெறப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. 

ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக மக்கள் அஞ்சலட்டை அனுப்பினர். மிதிவண்டி பேரணி நடத்தினர். ஓவியக் காட்சிகள்  நடத்தினர். உள்ளரங்க, வெளியரங்கக் கூட்டங்கள் ஏற்பாடுசெய்தனர். அனைத்துக் கட்சி தலைவர்களும் அறிக்கை விடுத்தனர். தீர்மானங்கள் நிறைவேற்றினர். ஆர்ப்பாட்டம், முற்றுகை மூலம் கவனம் ஈர்க்க முயன்றனர்.  எழுவர் விடுதலை கோப்பு எந்த அசைவும் இன்றி கிணற்றில் போட்ட கல் போல அப்படியே உள்ளது. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய ஆளுநரே அதை மதிக்காமல் இதுபோன்று அலட்சியம் செய்யும் போக்கினால், நாங்கள் சட்டத்தின் ஆட்சிக்காக போராடவேண்டிய அழைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஆளுநரின் அலட்சியம், இவர்களின் விடுதலைக்கு சட்டத்தடை ஏதும் இல்லை, அரசியல் தடையே காரணமாக உள்ளது என்பதாக மாணவர்களாகிய நாங்கள் புரிந்துகொள்கிறோம். தமிழகத்தில் அரசியல் செய்கிற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஏழுபேரின் விடுதலையை ஆதரிக்கின்றன. ஆனால்,  காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க ஆகிய இரண்டு தேசியக் கட்சிகள் தொடர்ந்தும் எதிரான கருத்துக்களைப் பதிவுசெய்துவருகின்றன. 

நான் ஏன் காந்தியைக் கொன்றேன் என புத்தகம் எழுதிய கோபால் கோட்சே உள்ளிட்ட மூன்று ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், எழுவர் விடுதலையில் 28 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும் அதில் அரசியல் செய்வதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. எனவே, வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஏழு தமிழர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் அந்தக் கட்சிகளுக்கு எதிரான தீவிர கருத்துப் பரப்புதலை மாணவர்கள் மற்றும் அமைப்புகளின் துணையுடன் மேற்கொள்வோம் என்பதை அறிவிக்கிறோம். அதேபோல், எந்த சட்டக் காரணமும் இன்றி காலம் தாழ்த்திவரும் ஆளுநரின் அலட்சியத்துக்கு எதிராகவும் மாணவர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட முடிவுசெய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.