Show all

நடிகை ராதாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓட்டுநர் காவல்துறையினரிடம் சிக்கினார்

நடிகை ராதாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓட்டுநரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். நடிகை ராதாவின் பிடியில் இருந்து தனது முதலாளியை மீட்க செல்பேசியில் மிரட்டல் விடுத்து பேசினேன் என அவர் காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். சுந்தரா டிராவல்ஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ராதா. இவர் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் சென்று குன்றத்தூரை சேர்ந்த வைரம் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார். இதையடுத்து அன்றைய தினமே முனிவேலின் மனைவி உமாதேவி, ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டு தரும்படி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரைத் தொடர்ந்து நடிகை ராதாவை மிரட்டியது தனது கணவர் வைரம் கிடையாது என்று அவரது மனைவி லீனாவும் ஆணையாளர் அலுவகத்தில் புகார் அளித்திருந்தார். ஒரே நாளில் நடிகை உள்பட 3 பெண்கள் காவல்துறையில் புகார் அளித்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து விருகம்பாக்கம் காவல்துறையினர் இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் நடிகை ராதாவுக்கு வந்த செல்பேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த எண் நீலாங்கரையைச் சேர்ந்த ஒருவர் பெயரில் இருந்தது. அதை தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அந்த எண்ணைத் தனது காதலி உபயோகித்து வருவதாக கூறினார். அதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, தான் அதுபோல் யாருக்கும் மிரட்டும் வகையில் பேசியில் அழைப்பு விடுக்க வில்லை என்று தெரிவித்து விட்டார். இதையடுத்து காவல்துறையினருக்கு முனிவேலின் மனைவி உமாதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைச் சேர்ந்தவர்கள் யாராவது பேசியில் அழைத்து நடிகைக்கு மிரட்டல் விடுத்து இருப்பார்களோ? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்தனர். அப்போது காவல்துறையினருக்கு முனிவேலுக்கு சொந்தமான காரை அடிக்கடி அந்தோணி பெனடிக்ராஜ், என்பவர் ஓட்டி வந்ததும், இதன் காரணமாக அவர் உமாதேவி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தோணி பெனடிக்ராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவர் மீதான சந்தேகம் காவல்துறையினருக்கு உறுதியானது. ஆதை தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், ‘நடிகை ராதாவுக்கு செல்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தது தான்தான்’ என்று ஒப்புக்கொண்டார். இதுகுறித்து டிரைவர் அந்தோணி பெனடிக்ராஜ் அளித்த தகவல்கள் பற்றி காவல்துறையினர் கூறியதாவது: செங்கல்பட்டைச் சேர்ந்த அந்தோணி பெனடிக்ராஜ், முனிவேல் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் நடக்கும் அனைத்து விசயங்களும் அவருக்கு தெரிந்துவந்தது. முனிவேலை அவர் காரில் அழைத்து சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் தனது கணவர் இன்று எங்கெல்லாம் சென்றார் என்பதை அவரது மனைவி உமாதேவி, அந்தோணி பெனடிக்ராஜிடம் கேட்டு தெரிந்து வந்து உள்ளார். ஒருகட்டத்தில் தனது கணவரின் நடவடிக்கையில் வேதனை அடைந்தார். தனது கணவர் இப்படி இருக்கிறாரே, அவரை நடிகை ராதாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கதறி அழுதபடி ஓட்டுநரிடம் கூறி உள்ளார். இதையடுத்து நடிகை ராதாவிடம் இருந்து முதலாளி முனிவேலை எப்படியாவது மீட்க வேண்டும் என்றும், அதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்தபோது ரவுடிபோல் பேசி மிரட்டினால் நடிகை பயந்து ஒதுங்கி விடுவார் என்றும், எனவே எந்த ரவுடி போல் பேசினால் அவர் பயப்படுவார் என்று நினைத்தபோதுதான் குன்றத்தூரை சேர்ந்த ரவுடி வைரத்தைபோல் பேசலாம் என்று முடிவு செய்துள்ளான். மேலும் தனது செல்பேசியில் இருந்து பேசினால் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து தான் டிரைவராக செல்லும் நீலாங்கரையில் வீட்டில் உள்ள பெண்ணின் செல்பேசியை அவர் இல்லாத நேரத்தில் எடுத்து பேசி விட்டு, அங்கேயே வைத்து விட்டதாகவும் தெரிவித்தான் இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அந்தோணி பெனடிக்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.