Show all

தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம், பத்ம ஸ்ரீ விருது பெற்றார்

ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சென்னை புற்றுநோய் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவுக்கு பத்ம விபூஷண்,

 

சம்ஸ்கிருத மொழியியல் வல்லுநர் பேராசிரியர் என்.எஸ். ராமானுஜ தத்தாச்சார்யா,

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண்,

தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம், நடிகை பிரியங்கா சோப்ரா, உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ

விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

 

     2016ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்குத் தேர்வான 112 பேரில் 56 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மாதம் 29ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக விருதுகள் வழங்கும் விழா தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

இதில் பாதுகாப்புத் துறை விஞ்ஞானி வாசுதேவ கல்குந்தே ஆத்ரே, கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கலைஞர் கிரிஜா தேவி, நடிகர் ரஜினிகாந்த், மூத்த பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ராமோஜி ராவ், டாக்டர் வி. சாந்தா ஆகிய ஐந்து பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும்,

 

     டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, சம்ஸ்கிருத மொழியியல் அறிஞர் என்.எஸ்.ராமானுஜ தத்தாச்சார்யா, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ராபர்ட் டீன் பிளாக்வில், டைம்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் இந்து ஜெயின், பின்னணிப் பாடகர் உதித் நாராயண் ஜா, சின்மயா மிஷன் அமைப்பின் சர்வதேசத் தலைவர் சுவாமி தேஜோமயானந்தா உள்பட 11 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

 

     பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வான ஆன்மிக குரு மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் நினைவாக ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்த சரஸ்வதி விருதைப் பெற்றுக் கொண்டார்.

 

     பெண்களுக்கான நாப்கின்களை எளிய முறையில் தயாரிக்கும் கருவிகளை உருவாக்கிய கோவையின் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் தலைமை செயல் அதிகாரி அருணாசலம் முருகானந்தம்,

திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா, சென்டினெல் ஆங்கில நாளிதழ் நிறுவன ஆசிரியர் தீரேந்திர நாத் பெஸ்பொருவா, கன்னட இலக்கியவாதியும் நாவலாசிரியருமான எஸ்.எல். பைரப்பா, புதுச்சேரியில் உள்ள ‘ஓலாந்த்ரே’ அமைப்பின் நிறுவனரும் சமூக சேவகருமான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஹெர்மன் எப் த பிளிக் மெடலின், போடோ சாஹித்ய சபா தலைவர் காமேஸ்வர் பிரம்மா, இதய அறுவை சிகிச்சை நிபுணர் தபன் குமார் லஹரி, உலகின் மிகப்பெரிய பள்ளி உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் அக்ஷயபாத்திரம் ஃபவுண்டேஷன் தலைவர் மது பண்டிட் தாஸா உள்பட 38 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

 

     மறைந்த மேடை நாடக நடிகர் சயீத் ஜாஃப்ரிக்குரிய பத்ம ஸ்ரீ விருதைப் பெற அவரது குடும்பத்தார் யாரும் வரவில்லை. சீனாவை சேர்ந்த யோகா ஆசிரியர் ஜாங் ஹுய் லானும் பத்ம ஸ்ரீ விருது பெற வரவில்லை. இவர்களுக்கான விருது தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

     நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உள்பட விருது பெற்ற பல சாதனையாளர்களின் குடும்பத்தினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருது பெறும் சாதனையாளர்களுக்கான ஒத்திகை ஒரு நாளுக்கு முன்பே நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், விருதுக்குத் தேர்வான பல பிரபலங்கள் இந்த முறை ஒத்திகையில் பங்கேற்கவில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்வுக்காக காலை 10.45 மணிக்கே வருமாறு விருது பெறுவோர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் விருது பெற எவ்வாறு நடந்து வர வேண்டும் என்று விளக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.