Show all

குவியும் பாராட்டு! குழந்தைகளைப் படிக்க வைத்தே ஏழையாகும் பெற்றோர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, வழிகாட்டும் நெல்லை ஆட்சியர்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக சில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், இவரது இரண்டரை அகவை மகள் கீதாஞ்சலியை தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை திடலின் அருகே உள்ள பால்வாடி மையத்தில் பயில அனுப்புகிறார். இம்மையத்தில் பயிலும் 20 குழந்தைகளுடன் கீதாஞ்சலியும் மழலைக் கல்வியை பயில்கிறார்.

(பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் அரசு கல்லூரிகளை பொதுமக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது தனிச் செய்தி) தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், என அனைவரும் தனியாரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் காலத்தில், ஒரு மாவட்ட ஆட்சியரே தனது மகளை பால்;வாடியில் படிக்க வைத்து முன்மாதிரி ஆகியிருக்கிறார்.

ஏன் உங்கள் மகளை பால்வாடியில் சேர்த்தீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, 'நாங்கள் (அரசு) தானே பால்வாடிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று பதிலளித்து  ஆச்சர்யப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர் சில்பா, 'எங்கள் பால்வாடிகளில் அனைத்துவித வசதிகளும் உள்ளன. அங்கு என் மகள் பலருடன் பழகுகிறாள், விளையாடுகிறாள். எங்கள் நெல்லை மாவட்டத்தில் சில ஆயிரம் எண்ணிக்கையிலான பால்வாடிகள் இயங்கி வருகின்றன. நல்ல வசதியுடன் கூடிய அந்த மையங்களில் பிள்ளைகளை திறம்பட வழிநடத்த ஆசிரியர்களும் உள்ளனர். விளையாட்டுப் பொருட்கள், நல்ல உள்கட்டமைப்பு என்று சிறப்பாகவே அமைத்துள்ளோம்.

அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட செயலி வசதியுடன் கூடிய செல்பேசி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், குழந்தைகளின் உயரம், எடை போன்றவற்றை கணக்கில் கொண்டு, அவர்களின் உடல்நலத்தில் கவனம் எடுத்துக் கொள்ள முடியும்.

பால்வாடியில் இருந்து பிள்ளைகள் பள்ளியில் சேரும் பொழுது, அந்த உடல்நலம் சார்ந்த அறிக்கைகள் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து அவர்களது உடல்நலனில் எப்போதும் அக்கறை எடுத்துக் கொள்ள முடியும்' என்கிறார்.

அரசு ஊழியர்கள் அனைவரும் இதை பின்பற்றினால் குழந்தைகளைப் படிக்க வைத்தே ஏழையாகும் பெற்றோர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,027.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.