Show all

வருமான வரிச்சட்டங்களை எளிமை படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழு: அருண்ஜேட்லி.

வருமான வரிச்சட்டங்களை எளிமை படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளதாக, நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வருமான வரிச்சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, ஜனவரி 31 ஆம் தேதிக்குள், தனது பூர்வாங்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நடுவண் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, இந்தக் குழு பரிந்துரைக்கும் சில மாற்றங்களை, பட்ஜெட்டில் அறிவிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தக் குழு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், வருமான வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவதுதான்.

சில உட்பிரிவுகள், இரண்டு பொருள்களை கொடுப்பவையாக உள்ளன. அதனால் அவை குழப்பத்தை உருவாக்கி, வழக்குகளுக்கு வழிவகுப்பவையாக உள்ளன.

இத்தகைய குழப்பத்தை நீக்கி, வருமான வரிச்சட்டம் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்ற தெளிவை உருவாக்குவதற்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறோம்.

தற்போதைய உட்பிரிவுகளை எப்படி எல்லாம் திருத்தலாம் என்பது குறித்து இந்த குழு பரிந்துரைக்கும்.

இதன் மூலம், வருமான வரி சட்டங்களில் நிச்சயத்தன்மை உருவாகும். அதே சமயத்தில், வரி செலுத்துவோர் எண்ணிக்கையிலோ அல்லது வரி வசூலிப்பதிலோ எந்த கணிசமான மாற்றமும் ஏற்படாது.

இந்தக் குழுவில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றிய பல்வேறு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் முதல்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அதை ஆய்வு செய்வோம். அவற்றில் எவை எல்லாம் ஏற்புடையதோ, அதன் அடிப்படையில் உட்பிரிவுகளை எளிமைப்படுத்த முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.