Show all

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பின்னடைவா! 95 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 விழுக்காடு பேர்கள் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. எனினும் ஜாக்டோ-ஜியோ தரப்பில் பணிக்கு திரும்புவது தொடர்பாக  எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

அதேசமயம், அரசின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் படிப்படியாக பணிக்குத் திரும்ப தொடங்கினர். நேற்று  குறைந்த அளவிலேயே ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர்.

மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 விழுக்காட்டு பேர்கள் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை, 70 விழுக்காட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருப்பதாக கூறியுள்ளார்.

இதுபற்றி சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி எழும்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சென்னையில் 99.9 விழுக்காடு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே வேலைக்கு வரவில்லை. தற்காலிக ஆசிரியர் பணிக்காக 600 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் பள்ளிக்கு அருகில் வசிப்போரை தேர்வு  செய்கிறோம்' என்றார்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.