Show all

83 ஆண்டுகளாக கோயில் படையலாக ஊண்புலவு! வெள்ளிக்கிழமை கொண்டாடவிருக்கும் திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவை படையலாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் வெள்ளிக் கிழமை அன்று நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஊண்புலவுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் தை பதினொன்றாம் நாள் நடக்கிறது. மதுரையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், விருதுநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் வடக்கம்பட்டி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் முனியாண்டியை வணங்க வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் ஊண்புலவு படையலாக வரும் வெள்ளிக் கிழமை வழங்கப்படும்.

வடக்கம்பட்டி கிராமத்தில் 3 நாட்கள் முனியாண்டி சாமி கோயிலில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் 2 ஆயிரம் கிலோ அரிசி, ஆட்டிறைச்சி ஊண்;புலவு இரவு பகலாகச் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பரிமாறப்படும்.

இதுகுறித்து கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் முனீஸ்வரன் கூறுகையில், திருவிழா அன்று 50க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் இரவு முழுவதும் ஊண்புலவு சமைக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு முனியாண்டிக்குப் படைக்கப்படும். அதன்பின் காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு காலை உணவாகப் ஊண்புலவு வழங்கப்படும்.

எந்த விதமான வேறுபாடும் இன்றி இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் ஊண்புலவு சாப்பிடலாம். பாத்திரங்களில் வாங்கிச் செல்லலாம். அன்றைய நாள் அனைத்து அகவையினரும் அமர்ந்து இங்கு சாப்பிடுவதைக் காணலாம். கடந்த ஆண்டு நாங்கள் 200 ஆடுகள், 250 சேவல்கள், 1,800 கிலோ அரிசி ஆகியவை சேர்த்து ஊண்புலவு செய்தோம். இந்த ஆண்டு இதைக் காட்டிலும் அதிகரிக்கும்.

வடக்கம்பட்டியில் உள்ள அனைத்து மக்களும் ஊண்புலவு விரும்பிகள். மதுரையில் உள்ள மதுரைமுனியாண்டி விலாஸ் உணவகம் கடந்த 70களில் தொடங்கப்பட்டது. இந்தக் கடையின் பெயரில் தென்னிந்தியா முழுவதும் ஆயிரம் கடைகள் இருக்கின்றன. முதன் முதலாக மதுரை முனியாண்டி விலாஸ் உணவகத்தை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவர் தொடங்கினார். அவரின் முயற்சியால் இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

அதன்பின் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் எனப் பலரும் மதுரை முனியாண்டி விலாஸ் கடையைத் தொடங்கினார்கள். மதுரை என்ற அடைமொழியோடு தொடங்கி நடத்திவருவதால், அனைவரும் சேர்ந்து இந்தத் திருவிழாவை நடத்துகிறோம். இவ்வாறு முனீஸ்வரன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.