Show all

ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மும்பை கொலபாவில் கார்கில் போர் தியாகிகளின் வாரிசுகளுக்காக 31 மாடி குடியிருப்பு கட்டிடத்தை ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் கட்டியது. 

கொலபா கடற்கரைப் பகுதியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட மாடிகளைவிட அதிகமான மாடிகள் கட்டப்பட்டு உள்ளது என்றும் தெரியவந்தது.

இந்தக் குடியிருப்பைக் கட்டியதிலும், வீடுகளை ஒதுக்கீடு செய்ததிலும் விதிமுறை மீறல்கள், ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் அசோக் சவான் பதவி விலக நேர்ந்தது.

அசோக் சவான் வருவாய் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், ஆதர்ஷ் குடியிருப்பு கட்டிடம் கட்ட விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாகவும், மேலும் குடியிருப்பில் உள்ள சில வீடுகளை தனது உறவினருக்கு ஒதுக்கி கொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

விசாரணையில், முன்னாள் முதல் அமைச்சர் அசோக் சவான் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரது மீதும் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் மராட்டிய மாநில முன்னாள் முதல் அமைச்சர் அசோக் சவான் மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம்,

கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு உள்ளது.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 12 வாரங்கள் மராட்டிய அரசுக்குக் கால அவகாசம் வழங்கிஉள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.