Show all

65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம்.

வண்டலூரை அடுத்த வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரம் உள்ள விளைநிலங்களைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்தி, அங்கு 65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்த முடியாமலும், அதற்கான இடத்தைத் தேர்வு செய்ய முடியாமலும் சிஎம்டிஏ அதிகாரிகளும் வருவாய்த் துறையினரும் திணறி வந்தனர்.

இந்நிலையில், இங்குள்ள 119 நில உரிமையாளர்களிடம் நேரடி பேச்சுவார்ததை நடத்துவதற்காக, நேற்று வண்டலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு செங்கல்பட்டு தாசில்தார் தனலட்சுமி தலைமை தாங்கினார். வண்டலூர் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன், துணை தலைவர் வேதகிரி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி, சிபிஐ(எம்எல்) கட்சி மாவட்ட செயலாளர் இரணியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிஎம்டிஏ மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பங்கேற்று, அங்கு 119 விவசாயிகளிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டனர்.அப்போது ‘அரசு மதிப்பீட்டின்படி 150 சதவிகிதம் பணமாகவும், நிலம் வழங்கும் அளவில் சரிபாதி அளவு சீர்படுத்தி தரப்படும்’ என நில உரிமையாளர்களிடம் அதிகாரிகள் உறுதி கூறினர்.

உடனே கருத்து கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்தும், விளைநிலங்களை கையகப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘உயிரியல் பூங்காவைத் திறந்தபோது, இனி வரும் காலங்களில் வண்டலூர் கிராமத்தில் ஒரு கைப்பிடி மண்கூட எடுக்கக்கூடாது என்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வாக்குறுதி அளித்துள்ளார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகவும், வண்டலூர்-வாலாஜாபாத் சாலை விரிவாக்கத்துக்காகவும் விவசாயிகள் வீடுகளையும் விவசாய நிலங்களையும் ஏற்கெனவே விவசாயிகள் இழந்துள்ளனர்.

வண்டலூர் பெரிய ஏரியின் நடுவே, தற்போது வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைத்து வருவதால், அங்கு குடியிருந்த ஏழைகளின் குடிசை வீடுகளும் அகற்றப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஊரப்பாக்கத்தில் தனிநபர் வசமுள்ள 110 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்’ என்றனர்.இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதனால் வண்டலூர் பகுதியில் நேற்று மாலை வரை பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டதால், அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.