Show all

தமிழக மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 கட்ட நடவடிக்கை

 

     தமிழக மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 கட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார்.

தி.மு.க. பாராளுமன்றஉறுப்பினர் திருச்சி சிவா, தமிழக மீனவர்களை அழைத்துக் கொண்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, 29 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 103 படகுகளை விடுவிக்கவும், தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது நடுவண் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் என்ன பதில் அளித்தார் என்பது குறித்து திருச்சி சிவா கூறியதாவது:

     5 கட்டங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்து இருப்பதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 29 மீனவர்களையும் 103 மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக இலங்கை தூதரிடம் பேசுவதாக என்னிடம் தெரிவித்தார்.

     அடுத்த கட்டமாக 20 நாட்களுக்குள் கடலோர காவல்படை அதிகாரிகள், நடுவண், மாநில அரசு அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் என இந்த பிரச்சினைக்கு தொடர்புடையவர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார்.

     3-வது கட்டமாக ஒரு மாத காலத்திற்குள் மேலே கூறப்பட்ட கூட்டத்தில் பேசியதன் அடிப்படையில், இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் என இரண்டு தரப்பு மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

     4-வது கட்டமாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை இங்கு (இந்தியா) அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

     5-வது கட்டமாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வழிவகை செய்வது என்பது இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது. அதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் நான் பிரதமரிடம் பேசி அதனை நடைமுறை படுத்துவேன் என்று கூறினார்.

     ஆக இந்தப் பிரச்சினைகளை படிப்படியாக அணுகுவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று தமிழக மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். என்னை பொறுத்தவரை பெயரளவுக்கு ஒரு மனுவை பெற்றோம் என்று இல்லாமல் படிப்படியாக பிரச்சினையை விவரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

     கச்சத்தீவு பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.  இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.