Show all

தங்க நகைகள் மீதான ஒரு சதவீத கலால் வரி வாபஸ் பெறப்படமாட்டாது

தங்க நகைகள் மீதான ஒரு சதவீத கலால் வரி வாபஸ் பெற்றப்படாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்து பேசியதாவது,

தங்கம் மற்றும் வைர நகைகள் மீது ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் தங்க நகைகளை கொண்டு வரும் நோக்கத்தில்தான் அந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்போது, சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும். அப்போது, தங்கம் உள்பட எல்லா பொருட்களும் சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் வந்து விடும்.

ஆகவே, நகை மீதான உற்பத்தி வரியை வாபஸ் பெற முடியாது. அதே சமயத்தில், இந்த உற்பத்தி வரி, சிறு வர்த்தகர்களுக்கோ, பொற்கொல்லர்களுக்கோ பொருந்தாது.

மேலும், நகை வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து வருவது பெரிய சவால்தான். ஒரு ரூபாய் கடனைக் கூட எந்த வங்கியும் தள்ளுபடி செய்யவில்லை.

கடனை திரும்ப வசூலிப்பதில், சட்ட நடைமுறை தடங்கலாக இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். என்று அருண் ஜேட்லி கூறினார்.

தங்க நகைக்கடை வியாபாரிகள் தங்கத்தின் மீதான உற்பத்தி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.