Show all

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்:கருணாநிதி

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வௌ;ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

     சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் 3 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில், 75 சதவீதப் பள்ளிகள் அப்போது மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அதிமுக அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி, தங்களை வாட்டி வதைத்துக் கொள்ளத் தேவையில்லை.

இந்த ஆட்சியினர் போராட்டம் நடத்துவோருக்கு நன்மைகள் செய்வதாகப் பாவனை செய்து, பொதுத் தேர்தலுக்காக, இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதைப் போன்ற அறிவிப்புகளைச் செய்யலாம். அது இல்லாத ஊருக்குப் போகாத வழியாகவே அமைந்து விடும்.

அதனால், அதிமுக ஆட்சியின் அணுகுமுறையை எண்ணிப் பார்த்து, போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும். ‘காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர்’ என்று அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.