Show all

முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.

தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடு நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நாளை காலை தொடங்கி 10-ந்தேதி மாலை வரை நடக்கிறது.

மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மாநாடு தொடக்க விழா நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடக்கிறது. முதல்வர்  ஜெயலலிதா தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் ஞானதேசிகன் வரவேற்று பேசுகிறார்.

மத்திய அமைச்சர்கள்  பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் பேசுகின்றனர். தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.பி.சங்கர் நன்றி கூறுகிறார்.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் 2 நாட்களும் 25 கருத்தரங்குகள் நடக்கின்றன. இவற்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

நாளை 8 கருத்தரங்கு நடைபெறும். அது முடிந்ததும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழ்நாட்டின் பெருமையை கூறும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

10-ந்தேதி காலை 9.30 மணிக்கு கருத்தரங்கு தொடங்கி மாலை 3.15 மணி வரை நடைபெறும். மாலை 4 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் முதல்வர்  ஜெயலலிதா பங்கேற்கிறார்.

மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டில் முதலீடு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு வரும் தொழில்களால் 1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. அந்த நாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளன.

இந்தியாவில் முன்னணி தொழில் அதிபர்களான ஆனந்த் மகேந்திரா, அனில் அம்பானி, தேபேஸ்வர், சந்தா கோச்சர், சிவநாடார் மற்றும் பல தொழில் அதிபர்களும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் வெளிநாட்டு தொழில் அதிபர்கள், பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. 191 நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. ஒவ்வொரு தொழில் வாரியாக காட்சி அரங்குகள் இடம் பெறும்.

வர்த்தக சபை உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என 5 ஆயிரம் பேர் மாநாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.