Show all

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகும் பிரிட்டனுக்கு முட்டுக்கட்டை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகினால் தனிநாடாக செயல்பட நேரிடும் என்று ஸ்காட்லாந்து எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தனர். ஆனால் பிரிட்டனின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 62 விழுக்காட்டினர் இந்த முடிவை தெரிவித்துள்ளதால் அதன்படி நடக்க ஸ்காட்லாந்து உறுதி பூண்டுள்ளதாக அதன் முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

இந்த விசயத்தில் இங்கிலாந்து உடன் சேர்ந்து இருப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சிக்கல் போன்ற பிரச்சனைகளால் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்பது இங்கிலாந்து பொது வாக்கெடுப்பின் முடிவாகும். தமது அரசின் முடிவுக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணையதள மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் தற்போது குழப்ப நிலை நீடிக்கிறது. இந்நிலையில் ஸ்காட்லாந்தின் எச்சரிக்கை இங்கிலாந்துக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.