Show all

கடுப்பில் பாமக! 11 ஆண்டுகளுக்கு முன்பே, இதே இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் அன்புமணிதானே

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செம கடுப்பில் இருக்கிறது  பாமக தலைமை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்றைய நடுவண் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் என்றும், ஆனால் அப்படி ஒரு விசயமே நடந்ததாக தெரிவிக்காமல் பாஜகதான் கதை பண்ணுகிறது என்று பார்த்தால், மற்ற கட்சிகளும், ஊடகங்களும் கூட எடுத்துக் கொடுக்கவில்லையே என்றும் கொதித்து போய் இருக்கிறார்கள். 

சில மாதங்களுக்கு முன்பு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனுக்கும் கீச்சுவில் ஒரு போரே நடந்தது. 'மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி, தமிழ்தொடர்ஆண்டு-5109ல்  (2008) அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி' என்று கடந்த ஆண்டு அன்புமணி கீச்சுவில் பதிவிட்டிருந்தார். மேலும், மதுரைக்கு முதன்முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என்பது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது! என்றும் பதிவிட்டு கேள்வியை கேட்டிருந்தார் அன்புமணி. 

இதற்கு தமிழிசையும், திரு. அன்புமணி அவர்களே! பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல் நடுவண் சுகாதார அமைச்சராக இருந்த உங்களால் ஏன் தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை. அடிக்கல் நாட்டி 150 கோடி ஒதுக்கியதாக கூறுகிறீர்கள். அப்படி என்றால் அதன் பிறகு திமுக 3 ஆண்டுகளாக ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணியோடு இருந்திருக்கு. அப்போ இந்த வேலைய முன்னெடுக்க தவறியது தி.மு.க வும், காங்கிரஸ் கூட்டணியும் தானே? இந்தப் பணியை செய்யாத நடுவண் மாநில அரசை கண்டித்து எத்தனை போராட்டம் பேரணி நடத்தி இருக்கிறீர்கள்? திடீரென ஒரு நாள் நான்தான் எய்ம்ஸ் க்கு அடிக்கல் நாட்டினேன் என்று பத்து ஆண்டுகள் கழித்து கீச்சு செய்வதில் என்ன பெருமை வந்து இருக்கிறது? எதையும் செயல்படுத்த வேண்டும் அதுதான் சாதனை என்று பதிவு செய்து இருந்தார்.

இடையில் இருவருமே இந்த விசயத்தை ஆறப்போட்டார்கள். இந்நிலையில் நேற்று மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் பாமக தலைமை கடும் விரக்தியில் உள்ளது. 

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியவர் அன்புமணி ராமதாஸ் என்றும், ஆனால் தாங்கள்தான் கொண்டு வந்த மாதிரி பாஜக இந்த விசயத்தை காட்டி கொள்வதாகவும் கொதித்து போய் கூறுகின்றனர். மேலும் இந்தவிசயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அதிமுக வாய் திறக்காமலேயே அமைதி காத்து வருவதாகவும் கூறுகிறார்கள். 

இத்தனைக்கும் அன்று அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டிய அதே பகுதியில்தான் நேற்று மோடியும் அடிக்கல் நாட்டிவிட்டு சென்றிருப்பது கூடுதல் கொந்தளிப்பை பாமக தரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,046.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.