Show all

அதிமுக: பாமகவிற்கும், பாஜகவிற்கும் நாற்பதையும் பிரித்து கொடுத்திருந்தாலும் தப்பில்லை! திமுக காங்கிரசுக்கு பத்து கொடுத்தது அதிகம்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி-பன்னீர் அதிமுக: செயலலிதா அவர்கள் எதிர்த்து வந்திருந்த, பாஜகவின் நீட், சரக்கு-சேவைவரியை ஏற்றுக் கொண்டு தமிழக மக்களை அவைகளுக்கு பலிகடா ஆக்கிய நிலையிலும், 

மேலும் அதிமுக அரசின் காவல்துறை, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பொதுமக்களில் பதின்மூவரைப் பச்சைப் படுகொலை செய்திருக்கிற நிலையிலும்,

செருப்பால் அடித்து விட்டு கருப்பட்டி கொடுத்த கதையாக என்கிற பழமொழி போல, பொங்கலுக்கு ரூபாய் ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளர் என்று இரண்டாயிரம் கொடுத்து மன்னிப்பு பெறலாம் என்கிற அதிமுகவையும் அதை ஆட்டிப் படைக்கிற பாஜகவையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர். 

பாமக சில தொகுதிகளை சாதிய அடிப்படையில் தக்க வைக்க முடியும். பொதுவாக புறமுதுகிட்டு விரட்டப் பட இருக்கிற பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்தது பாவம்தான். பாமகவிற்கு நாற்பதும் கொடுத்தாலும் தப்பில்லை. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு விசயத்தில் அவசரப்பட்டு விட்டாரோ என்றே தோன்றுகிறது! அதிமுகவுடன் பாமக சேர்ந்ததுமே 7 மற்றும் ஒன்று என தொகுதியை ஒதுக்கியது. இது யாருமே எதிர்பாராத ஒன்று. பாமக எங்கு போனாலும் கூடுதலாக இடங்களைப் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. 

பாமகவுக்கு, அதிமுக சுளையாக 7+1 என்ற தரவும் ஆடிப்போனது திமுக. இதனால்தான் காங்கிரஸ் கேட்ட 10 இடங்களை உடனடியாக தந்துவிட்டது. ஆனால் இப்போது சிக்கல் என்னவென்றால், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகியவை பட்டியலில் உள்ளன.

தற்போது திமுகவிடம் மொத்தமாக 30 தொகுதிகள் கை வசம் உள்ளன. இதில் தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் கணக்கு பெரும் குழப்பமாகும். எப்படி என்றால் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் தருவதாக இருந்தால், திமுகவின் இடங்கள் இருப்பு 23 ஆக குறையும். 

மனித நேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. எனவே 23லிருந்து 6 தொகுதிகளைக் கழித்தால், 17 ஆக குறைந்து விடும். 

இதில், மதிமுக, விசிக, மமக ஆகியோரை உதயசூரியன் சின்னத்திலேயே திமுக போட்டியிட வைக்கப் போவதாக தகவல் உள்ளது. அப்படிப் பார்த்தால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தேமுதிக உள்ளே வந்தால் திமுகவின் தொகுதிகள் 15 முதல் 17 ஆக சுருங்கும் ஆபத்து உள்ளது. 

திமுக இதுவரை இந்த அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டதில்லை என்பதால் இது கட்சியினரை மனதளவில் பாதிக்க செய்யும். அதேசமயம் தேமுதிக உள்ளே வருவதாக இருந்தால் மற்ற குட்டிக் கட்சிகளுக்கு இடம் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் வெளியேறும் வாய்ப்பையும் மறுக்க முடியாது. 

விஜயகாந்த் உள்ளே வந்தால் விசிக, மதிமுக இரண்டில் ஒன்று வெளியேறும் நிலை ஏற்படும் என சொல்லப்படுகிறது. இப்படி ஒரு நிலைமை இதுவரை திமுகவுக்கு வந்தது இல்லை. அதனால் காங்கிரசுக்கு 10 என்பதில் ஸ்டாலின் அவசரப்பட்டு விட்டாரோ என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,070.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.