Show all

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதை அடுத்து முன்னாள் ஐ.ஜி. ஜாபர்சேட்டிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீதான வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திடீரென ஆ. ராசா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புதிய வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெலிபோன் உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டிருந்தார்.

அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத்குமார், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோருடன் முந்தைய திமுக ஆட்சியில் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாஃபர் சேட் பேசுவது இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் கனிமொழியுடன் 2010ம் ஆண்டு நவம்பர் 23, 2011ம் ஆண்டு பிப்ரவரி 16, சரத்குமாருடன் 2011ம் ஆண்டு பிப்ரவரி 13, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுடன் 2010ம் ஆண்டு டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஜாஃபர் சேட் பேசியதாகவும், இவை அனைத்துமே ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கான ஆதாரம் என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.

இதை ஆராய்ந்த சி.பி.ஐ.,கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை விசாரணைக்கு வருமாறு வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டிடம் விசாரணை நடத்துவதற்காக உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.ஐ.யின் தொடர் நடவடிக்கையால் திமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.