Show all

புதுக்கோட்டையில் அரசின் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி அமையும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இது தவிர அரசின் ஒரு பல் மருத்துவக்கல்லூரியும், 21 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் சித்தமருத்துவத்தில் 7 கல்லூரிகளும், ஆயுர்வேதத்தில் 6 கல்லூரிகளும், ஹோமியோபதியில் 10 கல்லூரிகளும் உள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் 100 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளதாகவும் அதை 300 ஆக அதிகரிக்க வேண்டுமென இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி என்ற கொள்கை முடிவு கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2008-2009 ஆகிய ஆண்டுகளில் பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், தர்மபுரி, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் கல்லூரி அமைக்கப்பட்டது.ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தனி சமஸ்தானம் என்ற சிறப்பு அந்தஸ்துடன் திகழ்ந்து சுதந்திரத்துக்குப் பின் தனித்தன்மையை இழந்து 1974 -ல் தனி மாவட்டமாகப் பிரிந்ததில் இருந்தே பின்தங்கிய மாவட்டமாக நீடித்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியும், பொறியில் கல்லூரியும் அமையும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்து ஆட்சி முடியும் வரை இக்கோரிக்கை நிறைவேறாமலேயே இருந்தது.

இந்நிலையில், அனைவரும் எதிர்பாராத வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் புதுக்கோட்டையில் அரசின் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது குறித்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுகை எம்எல்ஏ- வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் ஆகியோர் மூலம் புதுக்கோட்டையிலுள்ள நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதுகையிலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் எதிரில் நகரச் செயலர் க. பாஸ்கர் தலைமையில் திரண்ட அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேல்பட்டோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல புதிய பேருந்து நிலையப் பகுதியிலும் பட்டாசு வெடித்து, பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.