Show all

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது, என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் யானைகளைப் பயன்படுத்த தடை செய்யக்கோரி வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் பிற பிராணிகள் நலச்சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கேரள மாநிலத்தில் நடைபெறும் பூரம் திருவிழாவில் யானைகள் கொடுமைப்படுத்தப் படுவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில வனவிலங்கு ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

மேலும், கேரளாவின் பூரம் திருவிழாவில் கோவில் யானைகள் பலவகையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றன, என்பதற்கு மனுதாரர்கள் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், தனி நபர்களால் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் யானைகள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை. இந்த வளர்ப்பு யானைகள் குறித்து எங்கும் பதிவு செய்யப்படுவதும் கிடையாது. எனவே இது குறித்தும் உரிய நெறிமுறைகளை நீதிமன்றம் வகுக்கவேண்டும் என்றார்.

கேரள அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், கேரளாவில் அனைத்து யானைகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ள விலங்குகளுக்கு மட்டுமே பதிவு செய்வது அவசியமாகிறது. கேரளாவில் கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை ஏதும் விதிக்கக் கூடாது என்றார்.

நடுவண் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் வனவிலங்குகளைத் தனிநபர்கள் பராமரிப்பது குறித்த சட்டப்பிரிவுகளை விளக்கினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்களது உத்தரவில், கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும், தனி நபர்களாலும் பராமரித்து வரும் யானைகள் குறித்த தகவல்களை தேவஸ்வம் நிர்வாக கமிட்டி மற்றும் மாநில கமிட்டிக்கு தெரிவிக்கவேண்டும். அனைத்து யானைகள் குறித்த தகவல்களை 6 வாரங்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும்.

திருவிழாக்களில் எத்தனை யானைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல்களையும் அளிக்கவேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கோவில்களின் யானைகளை மாநில அரசு கைப்பற்றுவது உள்ளிட்ட சட்டபூர்வமான பல நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இந்த வழக்கு தொடர்பான மூல ‘ரிட்’ மனு 8 வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.