Show all

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரை

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரையில் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: காந்தியவாதி சசிபெருமாளின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக நாள்தோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இதனால் சுதந்திர தின விழாவில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல்வரின் உரையில் மதுவிலக்கு குறித்து எதுவும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. முதல்வரின் 11 நிமிட உரையில் மக்கள் நலனுக்கான எந்தத் திட்டங்களும் இல்லை. மதுவிலக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர வேறுவழியில்லை.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: 7 கோடி தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பாவது சுதந்திர தினத்தில் வெளியாகும் என நம்பியிருந்தோம். ஆனால், மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மக்களுக்கு தமிழக அரசு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலாவது முழு மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழகத்தில் சுமார் 60 சதவீத மக்கள் மதுவினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், மாணவர்கள், குழந்தைகளை கூட மது விட்டு வைக்கவில்லை. எனவேதான் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. மக்களின் போராட்டங்களுக்கு முதல்வர் மதிப்பளிக்காதது வருத்தம் அளிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனாலும் சுதந்திர தின உரையில் அது குறித்து முதல்வர் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மதுவிலக்கு பிரச்சினையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் மதுவிலக்கு குறித்து ஏதாவது அறிவிப்பு வரும் என பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனாலும் அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் மதுவிலக்கு குறித்து முதல்வர் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மதுவிலக்கு பிரச்சினையை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.