Show all

மாணவ, மாணவிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் அம்ஆத்மி

மதுவிலக்கு கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயமணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர் யோகராஜ் உள்ளிட்ட அக்கட்சியினர்  வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: காந்தியவாதி மதுவின் தீமைகளை உணர்ந்து பல ஆண்டுகளாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சசிபெருமாள் எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதும், மது அருந்தியவர்கள் தங்கள் உயிர்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும்  கேடு விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல், பிள்ளைகளை அடித்து துன்புறுத்துதல், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

எனவே மதுவின் தீமைகளை உணர்ந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆம் ஆத்மி கட்சியும் மது விலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி போராடுகிறது. அவ்வகையில் முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளை அகற்றவும், பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.