Show all

சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்க

டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் (60), மயக்கமடைந்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சசிபெருமாள் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. சசி பெருமாளின் மகன் விவேக், தமிழகத்தில் மது விலக்கு அமல் படுத்தும் வரையில் தனது தந்தையின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், மதுவிலக்கிற்காக போராடிய அவரது உடலை நாட்டிற்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சசி பெருமாள் குடும்பத்திரிடம் சமாதானம் பேசி சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து, சசிபெருமாள் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இன்று காலை சசிபெருமாள் உடல் கொண்டு வரப்பட்டு, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள இ.மேட்டுக்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மாலையில், சசிபெருமாளின் உடல் அவரது வீட்டின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.