Show all

அ.தி.மு.க.ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு என கருணாநிதி குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது :-

அ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த ஆட்சியினர் தமிழ் நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே சிக்க வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ஆங்கில நாளேடு ஒரு நீண்ட கட்டுரையை, வரை படத்தோடு வெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில நாளேடுகளில் உள்ள நியாயமான விமர்சனங் களை நான் எடுத்து விளக்கிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு வாங்கியுள்ள கடன்கள் மாநில மக்களை எத்தகைய அபாய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன? அரசு செலுத்திட வேண்டிய வட்டித் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வட்டிக்குப் பணம் தருபவர் களைச் சார்ந்திருக்கும் ஏழை களுக்கு உதவிட மாநில அரசிலும் சொற்பத் தொகையே எஞ்சியிருக்கிறது.

ஆனால் அ.தி.மு.க.வினர் 2011-ல் ஆட்சிக்கு வந்த போது என்ன சொன்னார்கள்? தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தி.மு.கழக அரசு கடன்களைப் பெற்று இலவசத் திட்டங்களுக்கு வாரி இறைத்து விட்டதாகவும், அதனால் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மீதும் கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டதாகவும் பேரவையில் குற்றம் சுமத்தினார்கள்.

அந்தக் கேள்விக்கு பல முறை அப்போதே தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டது. இருந்தாலும் உருப்படியாக வேறு எந்தக் குற்றச்சாட்டும் கூறுவதற்கு இல்லாததால், கிளிப்பிள்ளை போல இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.உண்மையில் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்து வதற்காகத் தி.மு.கழகத் தலைமையில் அமைந்திருந்த தமிழக அரசு கடன் வாங்க வில்லை.

2005-2006ஆம் ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சி யில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு - 2010-2011இல் தி.மு. கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்தது.அ.தி.மு.க. ஆட்சியில், 2015-2016 நிதி ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2,11,483 கோடி. அதாவது தி.மு. கழக ஆட்சியில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன், அதாவது முன்பு இருந்ததை விட 234.98 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தின் கடன் எவ் வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால் 2010-2011இல் 91,050 கோடி ரூபாய் - 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் - 2012-2013இல் 1,20,205 கோடி ரூபாய் - 2013-2014இல் 1,40,042 கோடி ரூபாய் - 2014-2015இல் 1,78,171 கோடி ரூபாய் - 2015-2016இல் 2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சி யில் கடனை வெகுவாகப் பெருக்கியிருக்கிறார்கள் என்று நானல்ல, என்று ஆங்கில நாளேடு எழுதியுள்ளது. அதாவது தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விட, அ.தி.மு.க. ஆட்சி யில் கடன் சுமார் 200 சத விகிதத்திற்கு மேல் அதி கரித்துள்ளது.

தி.மு.கழக ஆட்சியில், ஆளுநர் உரை மீதான விவாதத் தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. வின் பொதுச் செய லாளர், ஜெயலலிதா, “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறக்கிறது” என்றார். அப்படிக் கேலி பேசிய ஜெயலலிதா, தற்போது நான்காண்டு கால ஆட்சிக்குப் பிறகு அந்தக் கடன் சுமையை இறக்கி விட்டாரா? அல்லது குறைத்து விட்டாரா? இரண்டு மடங்குக்கு மேல் அல்லவா பெருக்கியிருக்கிறார்?

தமிழ்நாட்டில் தனி நபரின் கடன் சுமை தற்போது எவ்வளவு தெரியுமா? கிராமப்புறத் தனிநபராக இருந்தால், 45,803 ரூபாய் கடனும், நகர்ப்புறத் தனி நபராக இருந்தால் 1,16,404 ரூபாய் கடனும் தற்போது இருப்பதாக அந்த ஏடு சுட்டிக் காட்டியுள்ளது.

அது மாத்திரமல்ல, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தனி நபர் கடன் என்று பார்த்தால், மேற்கு வங்கத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 11,253 ரூபாய்; நகரத்தில் 34,279 ரூபாய் - குஜராத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 25,536 ரூபாய்; நகரத்தில் 71,618 ரூபாய் - உத்தர பிரதேசத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 22,199 ரூபாய், நகரத்தில் 87,038 ரூபாய் - மராட்டியத்தில் தனி நபர் கடன் கிராமத்தில் 33,893 ரூபாய், நகரத்தில் 99,428 ரூபாய் - ஆனால் எல்லா மாநிலங்களையும் விட தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சியிலே தான் தனி நபர் கடன் கிராமங்களில் 45,803 ரூபாயாகவும், நகரங்களில் 1,16,404 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என்றும்; இந்தப் புள்ளி விவரங்களை யெல்லாம் “நேஷனல் சாம்பிள் சர்வே” அலுவலகம் தந்திருப்பதாகவும் ஆதாரத்தோடு ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

தி.மு. கழக ஆட்சியில் 2010- 2011ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை 3,396.45 கோடி ரூபாய் ஏற்படும் என்றும், நிதிப் பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவிகிதமாக இருக்கும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு வருவாய்ப் பற்றாக்குறையோ, நிதிப் பற்றாக்குறையோ தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விடக் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், 2015-2016ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை 4,616,02 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறை 31,829.19 கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் புள்ளி விவரங்களையும், ஆங்கில நாளேடு சுட்டிக் காட்டியுள்ள விவரங்களையும் பார்க்கும்போது, அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தலையிலே ஓசையின்றிக் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது என் பதை ஐயம் திரிபறத் தெரிந்து கொள்ளலாம்.

“கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்” என்றான் கம்பன். தமிழகத்தில், மிகப் பெரிய கடன் சுமைக்குக் காரணமான அ.தி.மு.க. அரசு, கலக்கமடையப் போகிறதா? அல்லது, நமது ஆட்சி தான் முடியப் போகிறதே, அடுத்து ஆட்சிக்கு வரப் போகிறவர்கள் மாட்டிக் கொண்டு விழிக் கட்டுமே என்று களிப்படையப் போகிறதா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.