Show all

அப்துல்கலாமின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கலாமின் வீட்டில் நேற்றிரவு முழுவதும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று காலை அவரது உடல், வீட்டிலிருந்து அருகிலுள்ள பள்ளி வாசலுக்கு மதச்சடங்குகள் நடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கலாமின் உடல், ராமேஸ்வரத்தின் முக்கிய வீதிகள் வழியாக, பேக்கரும்பு மைதானத்திற்கு சென்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். வழி நெடுகிலும் அலைகடலென மக்கள் திரண்டு நின்று மக்கள் குடியரசு தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

அப்துல்கலாமின் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உடல் அடக்கம் நடைபெறும் இடத்தில் இருந்த அப்துல்கலாமின் உறவினர்களுக்கு மோடி, ஆறுதல் கூறினார்.

அப்துல் கலாம் உடலுக்கு தமிழக ஆளுநர் ரோசையாவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து 21 குண்டுகள் முழங்க முப்படைகள் மரியாதை வழங்க முழு அரசு மரியாதையுடன் அப்துல்கலாமின் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.