Show all

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குழந்தைகள் இறப்பை தடுத்தல் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு தீவிர இருவார விழிப்புணர்வு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.நேற்று முதல் ஆகஸ்டு 7–ந்தேதி வரை நடக்கும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூரில் தொடங்கி வைத்தார்.பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்க வேண்டும் என்பது உலகமெங்கும் மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.

எனவேதான் உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.இந்திய அளவில் சிசு மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 40 இறப்பு என உள்ளது. தமிழகத்தில் சிசு மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 21 இறப்பு என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் 21 என்ற சிசு மரண விகிதத்தை 13 ஆக குறைத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.அவர் மேலும் :தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 71 லட்சம் பேர் உள்ளனர்.

தீவிர விழிப்புணர்வு முகாமில் ஒவ்வொரு வீடாக களப் பணியாளர்கள் சென்று உப்பு, சர்க்கரை கரைசலுக்கான பாக்கெட்டுகள், தேவைப்படும் குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகளும் இலவசமாக வழங்குவார்கள்.எடை குறைவான குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பொது சுகாதார பணியாளர்கள், கல்வித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, டாக்டர் சி.சேகர், குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.