Show all

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிறமொழி துறைகளுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் முயற்சியை உடனே ந

சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதலின்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் பிற மொழி துறைகளுக்கு கூடுதலாக புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணல்களை உடனே நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு ஒப்புதல் தராமாலேயே ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிறமொழி துறையில் கூடுதலாக பேராசிரியர்களை நியமிக்க வரும் 28-ம் தேதியன்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தலைநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக் கழகத்தில் தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பிற மொழிதுறைகளுக்கு சேவகம் செய்யும் இந்த போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கர்நாடகாவிலுள்ள பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட இருந்த தமிழ்த்துறை கன்னட வெறியர்களால் முடக்கப்பட்டது. இதேபோல் ஆந்திரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசத்தின் காசி இந்து பல்கலைக்கழகங்களில் தமிழக அரசின் நிதி உதவி பெற்றும் அங்குள்ள தமிழ் துறைகளில் இதுவரை காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவே இல்லை. தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமும் கூட தமிழ் துறையை ஒரு பொருட்டாக மதிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

தலைநகர் சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் 2 தமிழ் துறைகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தமே 7 கூட இல்லை. இதனால் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கக் கூடியது.ஆனால் இதைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகமானது மாணவர்கள் அதிகம் இல்லாத பிற மொழி துறைகளுக்கு விழுந்து விழுந்து சேவகம் செய்வதன் உள்நோக்கம்தான் என்ன? அதுவும் ஹிந்தி போன்ற துறைகளுக்கு ஏற்கனவே ஒரு பேராசிரியர் இருக்கும் போது மேலும் புதிதாக பேராசிரியர்களை நியமிப்பது ஏன்? தற்போதைய துணைவேந்தர், மேற்கூறப்பட்ட மற்ற மாநில மொழித் துறைகளுக்கு கடந்த ஆண்டு தான் தேவைக்கு அதிகமான உதவி பேராசிரியர்களை நியமித்தார்.தற்போது தமது பதவியின் கடைசி 6 மாத காலத்தில், உயர் நிலை பதவியான பேராசிரியர் பதவிகளையும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி துறைகளுக்கு நியமிக்க ஆர்வம் காட்டுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகியவை நம்முடைய வாழ்வுரிமையை, ஆற்று நீர் உரிமைகளை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன.

இதற்கு எதிராக தமிழக அரசும் தமிழக மக்களும் நித்தம் நித்தம் போராடி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் தலைநகரில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகமோ இந்த மாநிலங்களுக்கு அடிமை சேவகம் செய்வதைப் போல அந்த மாநிலங்களின் மொழி துறைகளுக்கு காவடிய தூக்கி செயல்படுவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமிழக அரசையும் அவமதிக்கும் செயல் இது.தமிழே தெரியாத ஒருவரை ஆட்சிக் குழு உறுப்பினர்களின் எதிர்ப்பையும் அறிவுரையையும் பொருட்படுத்தாமல், சமஸ்கிருதம் படித்த ஒருவரை தமிழை பரப்பும் வைணவத் துறையில் கடந்த ஆண்டு இதே சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்து தமது தமிழர் விரோதப் போக்கை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போதும் தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராகவும் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி குழுவின் ஒப்புதலைப் பெறாமலே சென்னைப் பல்கலைக்கழகத்தின் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி பேராசிரியர்களுக்கு நேர்காணல் நடத்துகிறார். இது பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதலின்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் பிற மொழி துறைகளுக்கு கூடுதலாக புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணல்களை உடனே நிறுத்த வேண்டும்; இதற்கான உத்தரவை சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.