Show all

விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் 2வது இடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டம்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படிஇந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகம் எல்லா துறைகளிலும், குறிப்பாக விவசாயத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதற்கு அதிக எண்ணிகையிலான விவசாயிகளின் தற்கொலையே சான்றாகும்.

தமிழக விவசாயிகள், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வழிதெரியாமல், அதற்காக வாங்கிய கடனுக்கு பதில் சொல்லமுடியாமலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா, அதை நடைமுறைபடுத்த தவறியதாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடனையோ, பயிர் காப்பீட்டுத் திட்டத்தையோ அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் ஆக்கபூர்வமாக செயல்படுத்தாத இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதோடு மக்களின் வாழ்வாதாரமான நீர் நிலைகளையும், ஏரிகளையும் பொதுப்பணித்துறை மூலம் அரசு கபளீகரம் செய்வது கண்டனத்திற்குரியது. உயிர்கள்  அனைத்திற்கும் தண்ணீர்தான் ஜீவாதாரமாகும். ஏரிகளையும், நீர் நிலைகளையும் முறையாக இந்த அரசு பராமரிக்காததால், பொது நீர் நிலைகளிலிருந்து மக்களுக்கு குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு போதுமான நீர் இன்றி தமிழகம் தவியாய் தவிக்கிறது. நீர் நிலைகளை காப்பாற்றி மக்களை காக்கவேண்டிய இந்த அரசே அவற்றை அழிப்பதில் அசுரவேகம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்.

இனிமேலாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலும், விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்றவும் இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை குறித்து இந்த அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.