Show all

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் யார் ?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதையடுத்து, கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி. தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான என்.சீனிவாசன் தனது ஆதரவாளரை இந்த பதவிக்கு கொண்டுவர தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத்பவாரை கடந்த வியாழக்கிழமை என்.சீனிவாசன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசித்தனர்.

சரத்பவார் ஆதரவுடன் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற அவரை என்.சீனிவாசன் சந்தித்ததாக தகவல் வெளியாகியது. சந்திப்பு முடிந்ததும் பெங்களூர் சென்ற என்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், சரத்பவார் சொன்னதை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டேன் என்றார்.

இதற்கிடையில், சரத்பவார் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அணுராக் தாக்கூர், இந்திய கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் அக்டோபர் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கு நாக்பூரை சேர்ந்த மனோகர் ஷஷாங்-ஐ ஒருமனதாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒருவேளை, தலைவர் பதவிக்கு வேறு யாராவது போட்டியிட நேர்ந்தால் அக்டோபர் நான்காம் தேதி தேர்தல் நடத்தப்படும். அப்படி, தேர்தல் நடந்தால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் அந்த தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் அணுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் கூட்டங்களில் என்.சீனிவாசன் பங்கேற்கலாமா? என்பது தொடர்பான வழக்கின்மீது வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், நான்காம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் என்.சீனிவாசன் வாக்களிக்கலாம் என அணுராக் தாக்கூர் கூறுவது நடைமுறைக்கு ஒத்துவருமா? என தெரியவில்லை.

புதிய தலைவராக முயற்சித்துவரும் மனோகர் ஷஷாங்க், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஓட்டளிக்கும் உரிமை பெற்ற 29 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்களை தனதுவசம் வைத்துள்ள சரத் பவாரின் ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மனோகர் ஷஷாங்க் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.