Show all

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சார பட்டியலில் இடம்பெறாத முக்கிய புள்ளிகள்.

பா.ஜ.க.மூத்த தலைவர்களான அத்வானி,மற்றும் முரளி மனோகர் ஜோஷியின் பெயர்கள் பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சார பட்டியலில் இடம்பெற வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக இருக்கிறார். 243 சட்டசபை தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் இப்போதைய பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து புதிய அரசு அமைய வேண்டும். எனவே தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது.  

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது. அதில் வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து, நவம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் 6.68 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன.

பா.ஜ.க.வில் தேர்தலுக்கான ஸ்டார் பிரச்சார பீரங்கிகளின் பெயர் பட்டியலில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய மந்திரி முரளி மனோகர் ஜோஷி நடிகரும், பாஜக சீனியர் தலைவருமான சத்ருகன் சின்ஹா ஆகியோர் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, ராஜிவ் பிரதாப் ருடி, கிரிராஜ் சிங், மனோகர் பாரிகர், அனந்தகுமார் மற்றும் தர்மேந்திர பிரதான் போன்றோர் பாஜகவின் ஸ்டார் பிரச்சாரகர்களாக செயல்படபோவதாக பா.ஜ.க.தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்வானி பா.ஜ.க.வில் இணைந்து மேலிட தலைவராக உயர்ந்த பிறகு, பீகாரின் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பிரச்சாரம் செய்யாமல் இருக்கப்போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.