Show all

பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்காக ஒரு அணியை அக்தர் வாங்குகிறார்

இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் முதல் போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஆட அனுமதி அளிக்கப்படவில்லை.

இதற்கிடையெ ஐ.பி.எல். பாணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. பி.எஸ்.எல். என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி அடுத்த ஆண்டு (2016) பிப்ரவரி 4–ந்தேதி முதல் 24–ந்தேதிவரை நடக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் ஆகிய நாடுகளில் இந்த போட்டி நடக்கிறது.

கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) கிறிஸ்கெய்ல், பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), மலிங்கா (இலங்கை), சதீப்– அல்–ஹசன் (வங்காளதேசம்) போன்ற சர்வதேச வீரர்கள் இதில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர். இதேபோல உள்ளூர் வீரர்களான அப்ரிடி, உமர் அஜ்மல், முகமது ஹபீஸ், மிஸ்பா–உல்ஹக் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பெஷாவர், குயட் ஆகிய நகரங்களை கொண்டு 5 அணிகள் பி.எஸ்.எல். போட்டியில் விளையாடுகின்றன.

இதில் ஒரு அணியை வாங்க பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்’ அமைப்பின் தலைவர் நஜம் சேத்தியை சந்தித்து பேசினார்.

பின்னர் சோயிப் அக்தர் கூறியதாவது:–

பி.எஸ்.எல். போட்டியை ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதேபோல நானும் அதே நிலையில் உள்ளேன். இதில் ஒரு அணியை வாங்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

இது எனக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்தியதில் எனது பங்களிப்பு இருப்பதை விரும்புகிறேன். நானும், எனது வியாபார நண்பரும் சேர்ந்து பி.எஸ்.எல். அணிகளில் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.