Show all

2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை தென் ஆப்பிரிக்கா நடத்துகிறது

வரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளன.

71 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் போட்டிகள் சங்க (சிஜிஎஃப்) கூட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் 2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் உரிமம் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு போட்டிகளை நடத்தும் உரிமத்தை வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, எட்மண்ட் நகருக்காக கனடா இந்தப் போட்டியை நடத்த விண்ணப்பம் அளித்திருந்தது. ஆனால் போட்டிகளை நடத்த ஆகும் செலவுகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் கனடா தனது முடிவிலிருந்து பின்வாங்கியது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவை தவிர வேறு எந்த நாடும் 2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்த முன்வரவில்லை.

முதல் முறையாக: இதையடுத்தே தென் ஆப்பிரிக்காவுக்கு போட்டியை நடத்தும் உரிமத்தை வழங்க சிஜிஎஃப் அமைப்பின் புதிய தலைவர் லூயிஸ் மார்ட்டின் அறிவித்தார். இதற்கான ஒப்பந்த ஆவணத்தை தென் ஆப்பிரிக்க பிரதிநிதிகளிடம் மார்ட்டின் வழங்கினார். இந்த அறிவிப்பு வெளியானதும் தென் ஆப்பிரிக்க மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். கிரிக்கெட், கால்பந்து, ரக்பி போன்ற தனிப்பட்ட போட்டிகளின் உலகக்கோப்பை தொடர்களை ஏற்கெனவே வெற்றிகரமாக நடத்தியுள்ள தென் ஆப்பிரிக்கா, காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் முதல் ஆப்பிரிக்க நாடு தல் என்ற பெறுமையை பெற்றுள்ளது.

85 வருட பாரம்பரியம்: டர்பன், தென் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதற்கான 90 சதவீத வசதிகள் இங்கு ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. மேலும் போட்டிகள் நடைபெறும் பெரும்பாலான இடங்கள் 2 கி.மீ சுற்றளவுக்குள்ளேயே இருக்கின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 85 வருட பாரம்பரியம் கொண்டதாகும். இந்தப் போட்டியை இதற்கு முன்னர், பிரிட்டன் 6 முறையும் ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் தலா 4 முறையும், நியூஸிலாந்து 3 முறையும் நடத்தியுள்ளன. ஜமைக்கா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகள் தலா ஒரு முறை இந்தப் போட்டியை நடத்தியுள்ளன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.