Show all

கலவரத்தின் போது விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கலவரத்தின் போது மாவட்ட விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. திப்பு சுல்தான் பிறந்த தினம் கர்நாடகாவில் அரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அம்மாநில பா.ஜ.க., விஷுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் குடகு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் திப்பு சுல்தான் பிறந்தநாள்விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்தவர்களை பா.ஜ.க, வி,எச்.பி. தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

நிலைமை கட்டுக்குள் அடங்காததால் குடகு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனிடையே விஷுவ இந்து பரிஷத்தின் குடகு மாவட்டத் தலைவர்  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின. ஆனால் தடியடியிலிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டிக் குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.