Show all

சச்சின்-வார்னே டி-20 தொடருக்கு ஐசிசி அனுமதி

சச்சின் டெண்டுல்கரும், ஷான் வார்னேவும் ஏற்பாடு செய்துள்ள டி-20 தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்டதாக இந்த தொடரை வார்னேவும், சச்சினும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அனுமதியை ஐசிசியிடமிருந்து வாங்குவதில் சச்சின் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது. இந்தத் தொடர் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரை நடத்துவதில் ஐசிசிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் சில நிபந்தனைகளை ஐசிசி விதித்துள்ளதாம். அதை வார்னேவும், சச்சினும் ஏற்றுக் கொண்டுள்ளனராம். சமீபத்தில்தான் அமெரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கான அங்கீகாரத்தை ஐசிசி ரத்து செய்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்தத் தொடர் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பங்கை ஐசிசிக்குத் தர வேண்டுமாம். அந்தப் பணத்தை வைத்து ஐசிசி அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க செலவிடுமாம்.  இந்தத் தொடரில் சச்சின், வார்னே தவிர ராகுல் டிராவிட், மெக்கிராத், ஜாக்கஸ் கல்லிஸ், கில்கிறைஸ்ட், கங்குலி, பிரையன் லாரா, லட்சுமன், வாசிம் அக்ரம் உள்பட 26 வீரர்கள் இடம் பெறுகின்றனர். அனைவருமே முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிகாகோவில் உள்ள ரிக்லி பீல்ட் மைதானம், நியூயார்க்கில் உள்ள யாங்கீ ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள டாட்ஜர் ஸ்டேடியம் ஆகியவற்றில் அமைக்கப்படும் டிராப் இன் பிட்ச்சில் இந்தப் போட்டிகள் நடைபெறும். அனைத்து மைதானங்களுமே பேஸ்பால் மைதானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி ஒப்புதல் மட்டுமே அளித்துள்ளதாம். மற்றபடி போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்களே தங்களது செலவில் செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.