Show all

.இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி விளையாடும் அந்த அணி   மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரமசாலாவில் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிறகு ஓய்வில் நீண்ட நாட்கள் இருந்த இந்திய அணியினர், வலுவான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருப்பதால் இந்திய அணி வீரர்களை உடல் தகுதி ரீதியாகவும், மனதளவிலும் வலிமையாக்க,  தரம்சாலாவில் இரண்டு நாட்கள் கடினமான பயிற்சி அளிக்க வேண்டும் என்ற யோசனையை அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி  தெரிவித்து இருந்தார். இந்த யோசனையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக்தாகூர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்படி இந்திய அணி வீரர்கள் இன்று தர்மசாலா சென்றனர். அங்கு வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுவது போல் மலையேற்றம், தடை ஓட்டம், கயிறு ஏறுதல் உள்பட பல்வேறு கடினமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடி உயரமான மலைப்பகுதியில் இந்திய அணியினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவதற்கு இந்த கடினமான பயிற்சி கைகொடுக்கும் என்று இந்திய அணியின் தேர்வாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

நெருக்கடியான சூழல்களை கையாள்வதற்கு  வசதியாக கடந்த 2006- ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு இது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜான் பச்சனன் ஏற்பாடு செய்திருந்தார். பயிற்சிக்கு பிறகு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதேபோல்,2010/2011 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது  இங்கிலாந்து அணியினரும் பாக்ஸிங் ஆகியவைகள் அடங்கிய ராணுவ பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டனர். இந்த தொடரை 24 ஆண்டுகளுக்கு பிறகு  இங்கிலாந்து அணி வென்று ( ஆஸ்திரேலியாவில்)சாதனை படைத்தது கவனித்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.