Show all

இந்திய கால்பந்து வரலாற்றின் மறக்க முடியாத நாள் சுனில் சேத்ரியின் 100 வது போட்டி

நான்கு அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் கென்யாவை நேற்று எதிர்கொண்டது இந்திய அணி. இப்போட்டியின் முதல்பாதி முழுவதுமே கனமழை பெய்ததால் எந்த அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 68-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்தியக் கேப்டன் சுனில் சேத்ரி கோலாக மாற்றினார். அடுத்து மூன்றாவது நிமிடத்திலேயே இந்தியா தனது இரண்டாவது கோலையும் அடித்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் இந்தியாவின் மூன்றாவது கோலை மீண்டும் அடித்தார் சுனில் சேத்ரி. இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன்னர், இந்தியா தனது முதன் போட்டியில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அப்போட்டியில் வெறும் 10 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பியிருந்தது. இது குறித்து மிகுந்த வேதனையுடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய கால்பந்து ரசிகர்கள், மைதானத்துக்கு வந்து, போட்டியை நேரில்கண்டு ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவை கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா மற்றும் சானியா மிர்ஸா என ஏராளமானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக நேற்றைய போட்டியில் அரங்கு முழுவதும் நிரம்பி வழிந்தது. 

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நன்றி கூறி ட்விட்டரில் ஒரு பதிவை மீண்டும் வெளியிட்டுள்ளார். இதில், "இன்றைய போட்டியில் கிடைத்த ஆதரவு நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் கிடைத்தால், மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த இரவு சிறப்பானது, ஏனெனில் நாம் அனைவரும் இன்று ஒன்றாக இருந்தோம். மைதானத்திற்கு வந்தும், வீட்டில் இருந்தும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என கூறியுள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.