Show all

நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 18 தங்கம்

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 18 தங்கம் உள்பட 22 பதக்கங்களை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறார்.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலம்பிக்கில் 6 பதக்கம் வென்றதுடன் நீச்சலில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து ஓய்வு முடிவை கைவிட்டு 2014-ம் ஆண்டில் மறுபடியும் நீச்சல் களத்திற்கு திரும்பினார். இதற்கிடையே குடித்து விட்டு கார் ஓட்டியதாக 6 மாத காலம் நீச்சலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பழைய நிலையை எட்டுவதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க நீச்சல் அணி தேர்வு போட்டியில் கலந்து கொண்டார்.

ஒமாஹாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தகுதி சுற்று மற்றும் அரைஇறுதியில் மின்னல்வேகத்தில் நீந்திய பெல்ப்ஸ், இறுதிசுற்றிலும் எதிர்பார்த்தது போலவே முதலிடத்தை பிடித்து பதக்கத்தை வசப்படுத்தினார்.

அவர் 1 நிமிடம் 54.84 வினாடிகளில் இலக்கை அடைந்து, ரியோடி ஜெனீரா ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க நீச்சல் அணியில் இடத்தை உறுதி செய்தார்,

‘அனேகமாக எனது வாழ்க்கையில் இது தான் கடினமாக அமைந்த நீச்சல் பந்தயமாகும்’ என்று பெல்ப்ஸ் குறிப்பிட்டார்.

 

2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தனது 15-வது வயதில் அடியெடுத்து வைத்த பெல்ப்சுக்கு இது 5-வது ஒலிம்பிக்காகும். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 5-வது முறையாக களம் காணும் முதல் அமெரிக்க நீச்சல் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெறுகிறார்.

பெல்ப்ஸ் நேற்று தனது 31-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக அவருக்கு ஒலிம்பிக் தகுதி வாய்ப்பு கிட்டியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.