Show all

6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா: கார்த்திக் மற்றும் சுபம் கில் அபாரம்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 33-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதைத்தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் டுபிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். டுபிளிஸ்சிஸ் 27 ரன்களிலும், ஷேன் வாட்சன் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து சுரேஷ் ரெய்னா 31 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 21 ரன்களிலும் ஆட்டமிழக்க 5-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் கேப்டன் டோனி இணைந்தார். கேப்டன் டோனி அதிரடியாக ஆடி 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா மற்றும் சுனில் நரின் தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கிறிஸ் லின் 12 ரன்னிலும், ராபின் உத்தப்பா 6 ரன்னிலும், சுனில் நரின் 32 ரன்னிலும், ரிங்கு சிங் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியாக கார்த்திக் மற்றும் சுபம் கில் ஜோடி அபாரமாக விளையாடி கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியாக கொல்கத்தா அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மான் கில் 57 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 45 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.  சென்னை அணி சார்பில் நிகிடி, கே.எம்.ஆசிப், ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.