Show all

இஜான் மிர்சா மாலிக்! அரபு மொழியில் பெயர் சூட்டப்பட்டது. பாகிஸ்தான், இந்திய விளையாட்டுவீர இணையருக்கு பிறந்த ஆண்குழந்தை

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வரிப்பந்து வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் மட்டைப்பந்து வீரர் சோயிப் மாலிக்கை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.  சானியா, பாகிஸ்தான் மட்டைப் பந்து வீரரை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் முதல் இடம் என பல சாதனைகளை செய்திருந்த சானியா, திருமணத்திற்கு பிறகும் இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று கம்பீரமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சானியா மிர்சா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு புதன் அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.  இது குறித்து மாலிக், தனது கீச்சு பக்கத்தில்  தெரிவித்திருந்தார்.

மாலிக் தனது கீச்சுவில், 'சானியா மிர்சாவுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி எப்போதும் போல் தைரியமாகவும் நலத்துடனும் இருக்கிறார். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. மிகவும் பெருமையாக உணர்கிறேன்' என்று உருக்கமாக பதிவு செய்திருந்தார்.

அவரது பதிவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த  ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், குழந்தைக்கு என்ன பெயர்? வருங்காலத்தில் குழந்தை வரிப்பந்து விளையாட்டு வீரரா? அல்லது மட்டைப்பந்து விளையாட்டு வீரரா? என்று பல விவாதங்களை இணையத்தில் தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில்  ரசிகர்களின் முதல்  கேள்விக்கு சானியா மிர்சா பதில் அளித்துள்ளார். சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இஜான் என்றால் அரபு மொழியில் 'கடவுளின் பரிசு' என்று பொருளாம். இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று தனது குடும்பத்துடன் கலந்து யோசித்த பின்னர், சானியா மிர்சா இஜான் பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார். குழந்தையின் பெயருடன் குடும்ப பெயராக 'மிர்சாமாலிக்' என்று இணைத்து அழைப்போம் என்றும் சானியா தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.