Show all

வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. 

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 குவித்து ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 106 ரன்களும் ஹோல்டர் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் மற்றும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 92 ரன்களும், ரகானே 80 ரன்களும், ப்ரித்வி ஷா 70 ரன்களும், கோஹ்லி 45 ரன்களும் மற்றும் அஸ்வின் 35 ரன்களும் குவித்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் மற்றும் வாரிகன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 47 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுனில் அம்ரிஸ் 38 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் மற்றும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் முதன் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டை கைப்பற்றி சாத்தை படைத்தார். மேலும் 10 விக்கெட் எடுத்த 8-வது இந்திய வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். 

இதையடுத்து, 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.  இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.