Show all

பரிதவிக்கும் தமிழக மக்கள்! நாம் வாக்களித்தது செயலலிதாவிற்கு; உரிமையை இழந்து புலம்ப எதற்கு இந்த அரசு

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது.

தமிழக மக்கள் தொகை 7,97,00,000 என்ற நிலையில் தலைக்கு ரூ50,000 கடனும் ஆண்டு வட்டி 5000 மும் நடப்பு நிதியாண்டில் தமிழக மக்களுக்கு சுமை அளவு என்று வரவு-செலவுத்திட்டம் தெரிவிக்கிறது.

தமிழக வரவு-செலவுத்திட்டம் குறித்து மாநில அரசியல் கட்சிகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்குவதாகச் சொல்லப்பட்டாலும், அந்தத் திட்டம் தொடங்கப்படவேயில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழகத்தின் நிதி நிலைமை திவாலான ஒரு நிறுவனத்தைப் போல ஆகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். 

இந்த வரவு-செலவுத்திட்டம் மிகச் சாதாரணமான அறிக்கை என்கிறார் மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன். இந்த நிதி நிலை அறிக்கை, ஒரு வழக்கமான கணக்கு பதிகை செய்யும் அறிக்கையாகத்தான் தென்படுகிறது. நீண்ட கால நோக்கில் ஏதும் இதில் திட்டமிடல் இல்லை. கடந்த நிதி அறிக்கையில் திட்டமிட்டபடி செலவழிக்கப்பட்டதா, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விவரங்கள் இல்லை. என்கிறார் நாகநாதன்.

இந்த வரவு-செலவுத்திட்டத்தில் கவலையளிக்கக்கூடிய மற்றொரு விசயம், மாநில அரசு கடன்களுக்குச் செலுத்தும் வட்டியைவிட மூலதனச் செலவு மிகக் குறைவாக இருக்கிறது. இது சரியானதல்ல. 

மேலும், பள்ளிக் கல்வித் துறைக்கு, சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த பிறகும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுபவர்களின் விழுக்காடு மிகக் குறைவாக இருப்பது ஏன் என்பதை விளக்கியிருக்க வேண்டும். அதற்கு நீட் தேர்வே காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் என்று சொல்லும் நாகநாதன், 14வது நிதிக் குழுவாலும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பாலும் தமிழகம் பாதிக்கப்பட்டதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினாலும் அவை வெறும் புலம்பலாகவே இருக்கிறது என்கிறார்.

செயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உரையை சரக்கு-சேவை வரி ஆய்வுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வம்தான் வாசித்தார். அதில் எங்களைக் கேட்காமல் வரி விகிதங்களை மாற்றக்கூடாது எனக் கூறியிருந்தார் செயலலிதா. ஆனால், அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பேச்சே காணோம். அவர் எழுப்பியது உரிமைக் குரல். ஓ. பன்னீர்செல்வத்தினுடையது வெறும் புலம்பல். இது ஒரு மாநில அரசு தயாரித்த வரவு-செலவுத்திட்டமாக இல்லை. நிதித் துறை செயலரின் கணக்கு வழக்கு அறிக்கையாக மட்டுமே இருக்கிறது என்கிறார் நாகநாதன்

தமிழக அரசுக்கு எகிறும் கடனுக்கு அடிப்படைக் காரணமே நடுவண் அரசு ஒரே வரி என்ற பெயரில் சரக்கு-சேவை வரி என்ற தலைப்பில், மாநில அரசன் வரிஆதாயத்தை கைப்பற்றிக் கொண்டு ஒற்றையொற்றைக் காசுகளாகப் பிச்சைப் போடுவதுதான். பரிதவிக்கிறார்கள் தமிழக மக்கள்! நாம் வாக்களித்தது செயலலிதாவிற்கு; உரிமையை இழந்து புலம்ப எதற்க்கு இந்த அரசு?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.