Show all

அதிக முறுக்கேற்றியதால் கயிறு அறுந்து போனது! பதவிகாலத்தின் இடையிலேயே பதவிவிலகினார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிசர்வ் வங்கி மற்றும் தலைமை அமைச்சர் மோடி அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் உர்ஜித் பதவி விலகியுள்ளார்.

உர்ஜித் படேல், பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜிநாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராவார்.

ஏற்கனவே தொழில்களுக்காக கடன் கொடுத்து முறையாக கடன் தொகை திரும்ப கட்டப்படாததால், அரசுடைமையாக்கப்பட்ட சில வங்கிகள் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் மேற்கொண்டு சிறு தொழில்களுக்காக அவ்வங்கிகள் கடன்தருவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்கவேண்டும் என அரசு விரும்பியதாக கூறப்படுகிறது.

உர்ஜித் படேல் அப்பழுக்கற்றவர். ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநர், ஆளுநர் பதவி உள்ளிட்டவற்றில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பெரிய அளவிலான பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் ஆழமான புரிதலை கொண்டிருக்கக்கூடிய, உயர்திறன் கொண்ட ஓர் பொருளாதார நிபுணர் உர்ஜித் படேல். அவரது தலைமையின் கீழ் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தியது ரிசர்வ் வங்கி.  என கீச்சுவில் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் தலைமை அமைச்சர் மோடி.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் உர்ஜித் படேல் நாட்டுக்கு செய்த சேவைகளை பாராட்டத்தக்க ஆழமான உணர்வுடன் அரசு ஒப்புக்கொள்கிறது. அவரது நிபுணத்துவத்தின் பலன்களை பெறவும் அவருடன் பொருளாதார விவகாரங்களை கையாள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்திருந்தது என இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது கீச்சுவில் மோடிக்கு ஒத்தூதியிருக்கிறார்.

இது அனைத்து இந்தியர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய விழிப்புக்கான ஒன்று என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் படேலின் பதவி விலகல் சூழ்நிலை எப்படியானது  என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த பதவி விலகல் இந்திய அரசு ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் தலையிடுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது என முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மட்டுமல்ல, அனைத்து மேல்மட்டத் துறைகளையும் மிரட்டி பணிய வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு என்பதற்கு இது முன்னோட்டம்.

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி என இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் பாரதீய ஜனதா அரசு வளைத்து நெறிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையான அதிகாரிகள் எதிர்த்து நிற்பது வரவேற்கத்தக்கது என்றார்.

உர்ஜித் படேலுக்கு முன்னதாக அப்பதவியில் ரகுராம் ராஜன் இருந்தார். ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்து நிதிக் கொள்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை ஆளுநரான உர்ஜித் படேல், அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்படுவார் என நடுவண் அரசு தெரிவித்திருந்தது.

55 அகவை உர்ஜித் படேல், உலகின் புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர். முன்னதாக, இந்தியாவின் நிதிக் கொள்கைகளில் முதன்மைத்துவம் வாய்ந்த மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்த குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

கென்யாவில் பிறந்த இவர், இந்திய குடிமகன் ஆனார். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர். தன்னுடைய ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு சர்வதேச நிதியத்தில் வேலை பார்த்தார். 

கடந்த பதினெட்டு ஆண்டுகளாகவே இந்தியா நிறுவனங்களிலும், இந்திய அரசு பதவிகளிலும் பணியாற்றத்தொடங்கினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.