Show all

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக்: த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதின.  இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், லித்தோன் தாஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். வங்கதேச அணி இறுதியாக 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் என்ற சிறப்பான இலக்கையே நிர்ணயித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சபிர் ரகுமான் 77 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் உனட்கட் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான் 10 ரன்களிலும், அடுத்து வந்த ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். எனினும் சிறப்பாக விளையாடிய ரோஹித் 56 ரன்கள் குவித்தார். ராகுல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி பெறாது என்பது போலவே தோன்றியது எனினும் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இறுதியாக இந்திய அணி  20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் வெறும் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இறுதிப்பந்தில் ஆறு ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா 2018  ஆம் ஆண்டு நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடரின் கோப்பையை வென்றது. 

வங்கதேச அணி தரப்பில் ருபேல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும், அல் ஹசன், நஸ்மால், ரஹ்மான் மற்றும் சர்க்கார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.