Show all

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் இல்லை

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை  நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளன.

 

ஆனால், எல்லையில் இரு நாடுகளிடையிலான உறவு சுமுகமாக இல்லாததால் திட்டமிட்டபடி போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆர்வம் காட்டவில்லை. இந்திய அரசு சம்மதித்தால் மட்டுமே இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதற்கிடையே போட்டியை நடத்த சம்மதிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-யிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

 

இதற்காக பிசிசிஐ-யின் புதிய தலைவர்  சஷாங்க் மனோகர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

 

இந்நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ அலுவலகத்தை சிவசேனைக் கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பிசிசிஐ அமைப்பின் மூத்த நிர்வாகியும், ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லாவை சஹாரியார் கான் டெல்லியில் சந்தித்து பேசினார்.

 

இந்தச் சந்திப்பு குறித்து சஹாரியார் கான் கூறும்போது:

 

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகருடன் எந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்காது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர் நடக்க வாய்ப்பு இல்லாததால் நாடு திரும்புகிறேன் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.