Show all

ஐஎஸ்எல்: கோவா-கொல்கத்தா போட்டி டிரா ஆனது

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கோவா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோவா மாநிலம் படோர்டாவில் நடந்த இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயம் காரணமாக 4 வாரங்கள் விலகியுள்ள நட்சத்திர வீரரான ஹெல்டர் போஸ்டிகாவுக்குப் பதிலாக அரட்டா ஸூமியும், அர்னாப் மோன்டல், ரினோ ஆண்டோ ஆகியோருக்குப் பதிலாக டிரி, டென்ஸில் பிராங்கோ ஆகியோரும் இடம்பெற்றனர்.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோவாவின் கோல் வாய்ப்பை முறியடித்தார் அட்லெடிகோ கோல் கீப்பர் அமாரின்டர். ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்த கொல்கத்தா மிட்பீல்டர் ஜேவி லாராவிடம் பந்து செல்ல, அவர் மிக அற்புதமாக கோல் கம்பத்துக்கு அருகில் (6 யார்ட் பாக்ஸுக்குள்) நின்ற ஸ்டிரைக்கர் இயான் ஹியூமை நோக்கி பந்தை கிராஸ் செய்தார். அப்போது ஹியூமின் பின்னால் நின்ற மிட்பீல்டர் அரட்டா ஸுமி, பறந்து வந்த பந்தை அப்படியே கோல் கம்பத்தை நோக்கி திருப்ப, அது கோலானது. கொல்கத்தா 1-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 62-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் பல்ஜித் சானி கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடிக்க, அதை கோவா பின்கள வீரர் கிரிகோரி தடுத்தார். அப்போது பல்ஜித் சானி, கிரிகோரியை கீழே தள்ள சானிக்கு நடுவர் யெல்லோ கார்டு கொடுத்தார். அதனால் கோபமடைந்த சானி, கிரிகோரியின் முகத்தில் தலையால் முட்டினார். இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுத்தார் நடுவர். இதையடுத்து அவர் வெளியேற, 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது கொல்கத்தா.

75-வது நிமிடத்துக்குப் பிறகு தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது கோவா அணி. 80-வது நிமிடத்தில் கோவா அணியின் கோல் வாய்ப்பை மிக அற்புதமாகத் தகர்த்தார் அட்லெடிகோ கோல் கீப்பர். அதன்பிறகு தொடர்ந்து வேகம் காட்டிய கோவா, 81-வது நிமிடத்தில் கோலடித்து ஸ்கோரை சமன் செய்தது.

கோல் எதுவும் விழாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கொல்கத்தா அணி கடைசிக் கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.