Show all

தொடர்ந்து இந்தியா தன் நிலைப்பாட்டில் மவுனம் காத்து வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள்,  போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.

அதில், போர்க்குற்றம் குறித்து வெளிநாட்டு, உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது. ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம் என்று கூறிவிட்டது.

இந்நிலையில், இலங்கை மீதான அறிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று பொதுவிவாதம் நடைபெற்றது. விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் சைய்த் ராத் அல், தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அரசு இன்னும் கொடுக்கவில்லை.

பொதுமக்களின் இடங்களை ஆக்கிரமித்துள்ள ராணுவம் வெளியேறவில்லை. மேலும் இறுதிக்கட்ட போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இஸ்லாமியர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பற்றி முந்தைய அரசு விசாரிக்கவில்லை.

தீவிரவாத தடுப்பு சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என புதிய அரசு அறிவித்திருப்பது, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா பொது விவாதத்தில் கலந்து கொண்டு உலக நாடுகளின் பிரநிதிகள் அளித்த கருத்துக்கள் வருமாறு:-

சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு இலங்கை போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்: சுவிட்சர்லாந்து

போர்க்குற்றம் தொடர்பான ஐநா மனித உரிமை அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம்: ஆஸ்திரேலியா

இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம்: இங்கிலாந்து

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு  எப்போதும் துணை நிற்போம்: ஜப்பான்

இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பிரான்சு

சர்வதேச நாடுகளின் தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா கருத்து

எந்த மாதிரியான விசாரணை என்பதை முடிவு செய்யும் உரிமை இலங்கைக்கு உண்டு. இலங்கை நடவடிக்கைகளை விமர்சிக்கும் நாடுகள் தீவரவாதத்தை ஆதரிப்பவர்கள்: பாகிஸ்தான்

சர்வதேசத்தின் ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கனடா

அனைத்து மக்களின்  உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம்: இலங்கை

இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்போம்: கொரியா

ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த இலங்கையின் புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு வரவேற்பு அளிப்பதாக அமெரிக்கா கருத்து

அனைத்து நாடுகளும் இலங்கை மீதான  அறிக்கை தொடர்பாக கருத்து கூறிய  நிலையில் இந்தியாவுக்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து இந்தியா தன் நிலைப்பாட்டில் மவுனம் காத்து வருகிறது.            

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.