Show all

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும்  ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி களம் இறங்கியது.

ரவிச்சந்திரன் அஸ்வின், மணீஷ் பாண்டே ஆகியோருக்குப் பதிலாக குர்கீரத் சிங், ரிஷி தவண் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோயல் பாரிஸுக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெற்றார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா  6 ரன்களில் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட் கோலி தவணுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தனர். 

ஷிகர் தவண் 68 ரன்கள் (91 பந்து, 9 பவுண்டரி) எடுத்திருந்தபோது போல்டானார்.  தவண் - கோலி ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது.  அதிக பட்சமாக கோலி, 117 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 117 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேஸ்டிங்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 215 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி 11 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல், 83 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 96 ரன்கள் எடுத்தார். இதனால் 48.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.  3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதோடு, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.