Show all

ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்தியாவும், அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று 2-2 எனத் தொடர் சமநிலையில் இருந்த நிலையில், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தலைநகர் டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் குலதீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியில், ரோகித் சர்மா (56 ரன்) தவிர அணைத்து டாப் ஆர்டர் வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  எனினும், 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புவனேஸ்வர் குமாரும், கேதார் ஜாதவும் 91 ரன்கள் சேர்த்து முறையே 46 மற்றும் 44 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது. இறுதியில், இந்திய அணி 237 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3 - 2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.