Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்கதேச அணி

பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றின் கடைசி போட்டியில் நேற்று அபுதாபியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணியில் ஷகிப் அல்–ஹசனுக்கு பதிலாக மொமினுல் ஹக்கும், பாகிஸ்தான் அணியில் முகமது அமிருக்கு பதிலாக ஜூனைட்கானும் சேர்க்கப்பட்டனர். 

இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், 4–வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமும், முகமத் மிதுனும் இணைந்து சிறப்பாக விளையாடிய இருவரும் முறையே 116 பந்துகளில் 99 ரன்களும், 84 பந்துகளில் 60 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச வீரர் ஒருவர் 99 ரன்களில் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்காளதேச அணி 48.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஜூனைட் கான் 4 விக்கெட்டுகளும், ‌ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதைத்தொடர்ந்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இமாம்-உல்-ஹக் மட்டும் அதிகபட்சமாக 83(105) ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை  இழந்து 202 ரன்கள் மட்டுமே குவித்தது. வங்கதேச அணி சார்பில் சார்பில் அதிகபட்சமாக முஷிஃப்பூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், ஹசன் 2 விக்கெட்டுகளும், ரூபெல் ஹொசைன், முகமதுல்லா, சர்க்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்கதேசம். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவுடன் வங்க தேச அணி மொத உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.