Show all

ஆல்–ஸ்டார்ஸ் கிரிக்கெட்: சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மீண்டும் தோல்வி

சச்சின் பிளாஸ்டர்ஸ் – வார்னே வாரியர்ஸ் ஆகிய அணிகள் இடையே ‘ஆல்–ஸ்டார்ஸ்’ என்ற பெயரில் 3 போட்டிகள் கொண்ட கண்காட்சி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரபலம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். நியூயார்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வார்னே வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.  இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி ஹூஸ்டன் நகரில் உள்ள ‘பேஸ்பால்’ மைதானமான மினிட் மெயிட் பார்க்கில் இந்திய நேரப்படி நவம்பர் 13 ஆம் தேதி  காலை நடந்தது.

இதில் டாஸ் ஜெயித்த சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் முதலில் வார்னே அணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த வார்னே வாரியர்ஸ் பேட்ஸ்மேன்கள், சச்சின் அணியினரின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். களம் இறங்கிய அனைவரும் இரட்டை இலக்கை கடந்ததுடன், அணியை இமாலய இலக்கை எட்ட வைத்தனர். 20 ஓவர்களில் வார்னே அணி 5 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்தது. சச்சின் அணி தரப்பில் குளுஸ்னர் 2 விக்கெட்டுகளும், ஷேவாக், மெக்ராத், ஸ்வான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பிறகு 266 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு  ஆடிய சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியால் 8 விக்கெட்டுக்கு 205 ரன்களே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் வார்னே அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. வார்னே அணி தரப்பில் சைமண்ட்ஸ் 4 விக்கெட்டுகளும், சக்லைன் முஷ்டாக் 2 விக்கெட்டுகளும், அகர்கர், காலிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.